தண்வனத்தில் நடந்த தலைவர்

ராமநவமி நல்வாழ்த்துகள். ராமர் அருளால் இவ்வுலகம் செழிக்கட்டும், சிறக்கட்டும்!

*

தண்வனத்தில் நடந்தவரை, தமிழ்சிறந்த ஆழ்வார்கள்

கொண்டாடும் பாவிரும்பிக் கோதண்டங் கரத்தேந்திப்

பெண்ணரசி துயர்தீரப் பெருங்கடலில் அணைகட்டி,

விண்ணோர்கள் புகழ்ந்தேத்த வென்றவரை வணங்கிடுவோம்.

*

கடல்சூழ்ந்த தீவொன்றில் கடுமனத்தன் சிறைவைக்க,

இடர்கொண்டு வருந்திநின்ற ஏந்திழையார் மனம்மகிழத்

தடந்தோளால் அம்பெய்து தருக்கனவன் உயிர்கொய்தார்,

குடந்தைநகர் வீற்றிருக்குங் கோனென்போம் கரங்கூப்பி.

*

மரமேழுந் துளைத்தபிரான் மானின்பின் சென்றதென்ன,

கரங்கூப்பும் பத்தர்கள் கட்டங்கள் தீர்ப்பதென்ன,

குரங்கரசர் குறைதீர்த்துக் குரைகடலை வென்றதென்ன,

அரங்கரென்று புகழ்கிறவர்க்(கு) அரியவரம் அளிப்பதென்ன!

*

அன்புடைய குகன்செலுத்தும் அழகுமிக்க படகேறி,

நின்னோடும் ஐவரென்ற நெடுமாலாம் நம்தேவர்,

பின்பிறந்தான், மனைவியுடன் பெருவனத்தில் நடக்கிறவர்,

தன்பெருமை சொலும்அனுமன் தமிழ்கேட்டு மகிழ்கிறவர்.

Leave a comment