Monthly Archives: July 2018

ஓரெழுத்து ஒருமொழியில் ஒப்பிலார் புகழ்

எல்லாப் பிறப்பும் எடுத்திளைத்தோம், கல்வளைத்து
வில்லாச் செயவல்ல வேந்தருங்கள் தாள்சேரும்
நல்லா(று) இதுவென்று நாணிவந்து வீழ்ந்துவிட்டோம்,
கல்லால்கீழ் போதித்தோய், கா

நன்மை நிலையறியோம், நானிலத்துச் செல்வமென்னும்
புன்மை மயக்கப் புரண்டோம், மலைவளர்ந்த
இன்சொல் மகளை இடங்கொண்ட பெம்மானே,
வன்மை எமக்களிக்க வா

நல்ல மலரெடுத்து நாயகர் நும்புகழைச்
சொல்லும் வகையறியோம், சும்மை வினையுடையோம்,
எல்லா உயிர்களுக்கும் ஏற்றம் அருளுகின்ற
புல்வாய்க் கரம்தருமா பூ?

வாழ்வில் வெலும்வகை வஞ்சகர்கள் சொன்னவழி
கீழ்மை, அறியாமல் கெட்டுவிட்டோம், அன்றந்த
ஆழ்மைக் கடல்தரு ஆலம் மகிழ்ந்துண்டோய்
தாழ்வை அகற்றிநலம் தா

வளைந்த நிலவையும் வாஞ்சையோ(டு) ஏற்ற
இளைஞீர், மழுவேந்தும் ஏறு, வயலில்
களைகள் விதைத்தோம், கருணை பொழிந்து
விளைப்பீர் அகத்தன்பாம் வீ

சலத்தால் பலகுற்றம், சங்கடங்கள் செய்தோம்,
பலத்தால் பிழைத்தோம், பரிவுடன் ஏற்றீர்,
நிலத்தில் புகுநோயை நீக்கினீர், உங்கள்
நலத்தைச் சொல்லுமென் நா

இருளை ஒளியென எம்முள்ளம் நம்பி
உருண்ட புழுதி ஒருகோடி யாக்கை,
கருணைக் கடலீர், கவலை அறுத்தீர்
குருவீர், எமைக்காக்கும் கோ

நாமமும் சொல்லவில்லை, நல்லவை கேட்கவில்லை,
ஓமமும் செய்யவில்லை, உண்மைகள் பேசவில்லை,
ஊமன் பசியறிந்(து) ஊட்டுகின்ற அன்னைபோல்
காமனை வென்றநும் கை

அண்டை அயலார் அருவருக்கச் செய்தயெங்கள்
பண்டைப் பிறவிப் பவங்கள் எரித்திடுமோ
வெண்ணீ(று) அணிந்து வெளிநடனம் செய்வார்தம்
திண்மைக் கரமேந்தும் தீ

உயர்வை உணரா(து) உழன்றது போதும்,
அயனும் அரியும் அறியாப் பெரும,
நயந்து பதத்திருத்தி நன்மை புரிந்த
பயனைப் புகழுமிப் பா