Monthly Archives: June 2022

நிமிர்

பட்டுப் பூச்சி பறக்கும், சிரிக்கும்,
பட்டம் வாலை நீட்டிக் களிக்கும்,
எட்டுக் காலார் வலையைச் செய்வார்,
இசைமிகு பாடல் பாடுங் குயில்கள்,
வட்டம், பிறையென மாறும் நிலவு,
வண்ணம் தீட்டி மகிழும் விண்வில்,
எட்டுத் திசையும் இனிமை, இனிமை,
ஏனோ மனிதன் பாரான், நிமிரான்.

சின்னஞ் சிறிய திரைகள் விரும்பிச்
சிக்கிக் கிடக்கும் அவலம் ஏனென்(று)
அன்போ(டு) இயற்கை கேட்கும், இவனோ
ஆனால் நான்மிக பிஸியென்(று) உரைப்பான்,
பின்னர் காண்பேன் எழில்கள் யாவும்,
பெரிதென் திட்டம் பார்நீ என்பான்,
அன்னம் கண்முன் இருந்தும் பசியோ(டு)
ஆண்டுகள் சென்றபின் அறுசுவை விருந்தாம்.