Monthly Archives: September 2016

வெண்பா எழுதக் கற்றிடலாம்

வெல்லம் போலே இனிக்கின்ற
வெண்பா எழுதக் கற்றிடலாம்
எல்லாம் சுலபம், சிரமமில்லை,
எளிதில் பழகும் நுட்பம்தான்.

குறிலும் நெடிலும் கற்றுக்கொள்,
குழுவாய்ச் சேர்தல் பார்த்துக்கொள்
அறிவாய் நேர்நிரை சூத்திரங்கள்,
அழகாய்ப் பகுக்கப் பழகிக்கொள்.

நேர்நிரை அசைகள் நால்விதமாய்
நேர்த்தி யுடன்தான் சேர்ந்திடுமே
சீர்மிகு தேமா, புளிமாவாம்,
சிறந்த கூவிளம், கருவிளமாம்.

இத்துடன் காய்கள் சேர்ந்துவரும்
இனிமை தன்னைக் கூட்டிவிடும்
அத்தனை வரிசையும் பழகிவிட்டால்
அனைத்தும் சுகமே அனுதினமும்.

நண்பர் பார்த்து மனிதர்கள்
நன்றாய்ப் பழகும் தன்மைபோல்
வண்ணம் பார்த்து இச்சீர்கள்
வகையாய்ச் சேர்தல் பயில்வாய்நீ.

மாச்சீர் அருகே நிரைவரலாம்
மகிழும் விளம்,காய் நேரோடு,
ஈச்சம் பழம்போல் நாவுக்கு
இனிதாம் செப்பல் ஓசையெழும்.

இரண்டே அடியில் குறள்வெண்பா,
இன்னும் உண்டு பலவெண்பா,
இரண்டொடு இரண்டடி நேரிசையாம்,
இன்னிசை என்பதும் அங்குண்டாம்.

பலவரி வந்தால் பஃறொடையாம்,
பாங்காய் எழுதத் தடையிலையே,
நிலத்தில் எவரும் மகிழ்ந்திடுவார்
நின்றன் பாவின் அழகினிலே.

ஈற்றடி ஒருசீர் குறைந்துவரும்,
இதனை அறிவாய், மறவாதே,
மாற்றமொன் றுண்டு, கடைசிச்சீர்
மலர்,நாள் காசு, பிறப்பாகும்.

பிழையே இன்றி எழுதிடவே,
பித்தாய் ஆவாய் வெண்பாவில்,
இழையாய்க் கவித்துவம் உள்ளூற
எழுதிக் குவிப்பாய் பலபாக்கள்!

பின்குறிப்பு: வெண்பா எழுதுவதுபற்றி ஓர் ஆர்வத்தை உண்டாக்குவதுதான் இந்தச் சிறுவர் பாடலின் நோக்கம், முழுமையான விதிமுறைகள் இங்கே இல்லை. ஆர்வமுள்ள சிறுவர்கள் இவற்றில் ஒன்றைச் செய்யலாம்:

1. என்னுடைய இந்த வீடியோ தொடரில் மரபுக்கவிதை/வெண்பா அடிப்படைகளைக் கற்கலாம்: https://nchokkan.wordpress.com/2014/03/21/mrbkvbsc/

2. கி. வா. ஜ. அவர்களின் ‘கவி பாடலாம்’, பசுபதி அவர்களின் ‘கவிதை இயற்றிக் கலக்கு’, இலவசக்கொத்தனாரின் ‘ஈஸியா எழுதலாம் வெண்பா’ போன்றதொரு நூலை வாசிக்கலாம், மரபுக்கவிதை அடிப்படைகளை நன்கு கற்றுக்கொள்ளலாம்.