Monthly Archives: August 2022

அறிவரசி தேவி

எண்ணெழுத்து வரங்கள் இவ்வுலகுக்(கு) அருள்வார்,
வெண்கமலத்(து) அமர்வார், வீணையிசை பொழிவார்,
எண்ணத்தில் தூய்மை இருக்கின்ற பேர்க்குப்
பண்ணிசைத்துப் பாடும் பண்பருளிச் சிரிப்பார்.

வண்ணமலர் சூடி வையகத்தில் அறிவைப்
பெண்ணரசி பரப்பப் பேரின்பம் நிலைக்கும்,
விண்ணோர்கள், மாந்தர் வேண்டிடுவார், அருளாங்
கண்ணோட்டம் மிகுந்தார் கவின்தாள்கள் பணிவார்.

பொன்மணிகள் மட்டும் பொருட்டென்று எண்ணும்
நன்மையிலா வாழ்க்கை நாயகியால் மாறும்,
மன்னுலகில் எவர்க்கும் மதியென்னும் வரத்தை
அன்போடு வழங்கும் அறிவுமகள் சித்தம்.

அன்னத்தை நிகர்க்கும் அழகுநடைத் தேவி,
சொன்மாலை கோத்துச் சூட்டுவிப்பார், சூடுவார்,
பன்மலர்கள் தூவிப் பனிமொழியை வணங்கும்
கன்மனத்தர் கூடக் கவிவாணர் ஆவார்.

தாமரை அமர் எழிற்றேவி

தாமரையில் அமர்ந்து தண்ணருளைப் பொழிவார்,
ஆமருவி நாதர் அவர்மார்பில் திகழ்வார்,
ஏமங்கள் தீர்க்கும் எழிற்றேவி, நாளும்
நாமங்கள் உரைத்தால் நல்லவரம் அருள்வார்.

பாமருவும் நாவர் பாடுகின்ற திருமகள்,
சேமங்கள் பெருக்கிச் சீர்வளர்க்கும் அன்னை,
மாமலரார், அரியிடம் மான்கேட்ட(து) ஏனோ,
தீமனத்தன் கொடுமை தீர்த்தருளத் தானோ.

செல்வங்கள் குவித்துச் சீலங்கள் வளர்த்து,
நல்லோர்கள் போற்ற, நாண்மலர்கள் சூடி,
பொல்லாரை வீழ்த்தும் பொன்மகளைப் பேசும்
எல்லாரும் பெறுவர் இணையில்லா வீட்டை.

வில்லொக்கும் புருவம், வேலொக்குங் கண்கள்,
சொல்லுக்குப் பொருளுஞ் சுடரிரண்டுக்(கு) ஒளியும்
பல்லுயிர்க்கு நலமும் பாங்காக அருள்கை,
முல்லையெனச் சிரிக்கும் மொய்குழலார் போற்றி.

உலகாளுந்தேவி

உலகாளுந் தேவி, உலகுசெய்யும் நாயகி,
புலவர்கள் போற்றப் பூஞ்சிரிப்பை நல்குவார்,
கலக்கங்கள் தீர்த்துக் கவின்வளங்கள் பெருக்குவார்,
வலம்வந்து தொழுவோம், வல்லமைகள் பெறுவோம்.

பலவுயிரும் இங்கு பாங்காக வாழும்,
குலங்காக்கும் உத்தமி, கொடியிடையார் என்னும்,
நிலம்,வானம், கதிரவன், நிலா,விண்மீன் யாவும்
விலங்கல்கோன் மகளை வியந்தேத்திப் போற்றும்.

எம்செயல்கள் என்னும் இழிசெருக்கை விலக்கி,
அம்பிகையின் ஆணை, அவைசெய்வோம் என்று
நம்பிக்கை கொண்டு நடக்கிறவர் வெல்வார்,
கும்பிட்ட பேர்கள் குவலயத்தை ஆள்வார்.

வம்மின்கள், அழகி, வளைக்கரத்தார், மலைமகள்
அம்புயத்தை நிகர்க்கும் அடிதொழுவோம், பகைவர்
மும்மதில்கள் எரித்த முதல்வரவர் தலைவி,
அம்மாவென்(று) ஏத்தி அருள்மழையில் நனைவோம்.