Monthly Archives: June 2018

எத்தனைபார் கொள்ளை எழில்

‘எத்தனைபார் கொள்ளை எழில்’ என்று ஹரியண்ணா தந்த அழகிய ஈற்றடிக்கு எழுதிய சிவன் வெண்பாக்கள்:

மத்தமணி தேவரவர் மந்தச் சிரிப்பழகு,
பித்தமவர் மேற்கொண்ட பேதை இடத்தழகு,
அத்தரவர் அம்பலத்தில் ஆடும் பதத்தழகு,
எத்தனைபார் கொள்ளை எழில்

கத்திவந்த ஆனைக் கருந்தோலும், மாமுடியில்
கொத்தெனப் புன்னகைக்கும் கொன்றையும், கோனொருவன்
கத்துவகை செய்த கவின்விரலும், கண்ணுதலும்,
எத்தனைபார் கொள்ளை எழில்

எத்தனைக் குற்றங்கள் இப்புவியில் செய்தாரும்
பித்தரே என்றலறப் பேரருளால் காக்கின்ற
உத்தமர் நற்குணங்கள் ஒவ்வொன்றாய் எண்ணினால்
எத்தனைபார், கொள்ளை எழில்

வித்தாகி, பூமிக்கு வேராகி, மாந்தர்தம்
சத்தாகி, நட்பாகி, சங்கத் தமிழாகி,
சித்தாகி, நற்றவச் சீராகி நிற்கின்றார்,
எத்தனைபார் கொள்ளை எழில்

ஒத்தொருவர் இல்லா உறையூரார், பத்தருக்குத்
தித்தித்(து) அகந்தங்கும் தில்லையவர், சோலைதனில்
கத்துகடல் மோதுகின்ற காழிப் பெருங்கடவுள்,
எத்தனைபார் கொள்ளை எழில்

தத்தை இடத்திருக்கத் தாதை நடம்புரிய,
பித்தா, பிறைசூடீ, பேரருளா என்றுபலர்
முத்தி தரும்பதத்தில் மூழ்கிக் கிடக்கின்றார்,
எத்தனைபார் கொள்ளை எழில்

சுத்தச் சிவநெறியால் சூழ்வினைகள் தூளாகும்,
எத்தை விழுங்குவதென்(று) ஏங்கும் நிலைமாறும்,
மெத்தப் புகழ்கூடும், மேன்மைகள் அண்டிவரும்,
எத்தனைபார் கொள்ளை எழில்

கொத்தும் அரவங்கள் கூத்தருக்கு நற்கலமாம்,
தத்தும் மறியுண்டு, தண்மதியும் ஆங்குண்டு,
மொத்தச் சுரர்படையும் மோகிக்கும் தாளுண்டு,
எத்தனைபார் கொள்ளை எழில்

நத்திப் பதம்பணியும் நல்லவரைத் தாங்குவதும்,
நித்தம் அவர்நினைவால் நெஞ்சுருகச் செய்வதுவும்,
தொத்தும் வினைகள் துடைத்தெறிந்து காப்பதுவும்,
எத்தனைபார் கொள்ளை எழில்

அத்தி உரியணிந்தார், ஆத்தி உகந்தணிந்தார்,
இத்தி மரத்தடியில் ஈந்தார் நெறிபலவும்,
புத்தி பெருகவைக்கும் பொற்றாள் நமக்களித்தார்,
எத்தனைபார் கொள்ளை எழில்