கற்போம்

கற்றுக் கொண்டால் குற்றம் இல்லை,
கற்கப் போந்தால் வானம் எல்லை,
வெற்றுப் பெருமை பேசல் தொல்லை,
வியனுல(கு) எல்லாம் கல்விச் சாலை.

மரமுஞ் செடியும் மலருங் கொடியும்
மனத்தைத் திறந்தால் செழுமை என்னும்,
வரவுஞ் செலவும் பாரா(து) இங்கு
வையஞ் சிறக்க வாழ்நீ என்னும்.

இரவும் பகலும் மதியுஞ் சுடரும்
இம்மியுஞ் சோரா(து) உழைநீ என்னும்,
புரவிக் கூட்டம் விரைவைச் சொல்லும்,
பொன்னைப் போன்றது நேரம் என்னும்.

கடினப் பாறையில் துளிர்க்கும் இலைகள்
கவலை தீர்த்தல் உன்கடன் என்னும்,
விடியற் காலைப் பறவைப் பாடல்
விலகும் துயரம், மகிழ்நீ என்னும்.

உணவை இட்டோர்க்(கு) உதவும் பசுக்கள்
உழைக்கா(து) இருத்தல் பாவம் என்னும்,
சுணங்கா(து) இனிய தேனைத் தேடும்
சுரும்புகள் வேண்டாம் சோம்பல் என்னும்.

வரிசை காக்கும் எறும்புக் கூட்டம்
வழியும் முக்கியம் பலனோ(டு) என்னும்,
வரிப்புலி எல்லாம் மெல்லச் சிரித்து
வலிமை சொத்து, சேர்ப்பாய் என்னும்.

மழையை வாங்கி உலகுக்(கு) அளிக்கும்
மாநதி பயனுற வாழ்வாய் என்னும்,
கழைகள் குனிந்து மீளும் போது
கனிவும் பணிவும் கற்பாய் என்னும்.

சுற்றிப் பார்த்தால் எத்தனை பாடம்,
சோர்வைப் போக்கும் பள்ளிக் கூடம்,
வற்றா(து) இந்தக் கல்விச் செல்வம்,
வாழ்வில் இன்பம் குன்றா(து) என்றும்.

Leave a comment