உலகு உனது

ஒருபக்கம் மட்டும் பார்த்தோம், ஓயாமல் சத்தம் போட்டோம்,
உருள்கின்ற நுட்பம் கற்றோம், உட்காரும் திறனைப் பெற்றோம்,
இருகைகள், காலால் ஊர்ந்தே ஏழுலகைப் பார்க்கச் சென்றோம்,
ஒருவர்கை பற்றிப் பின்னே ஊரெல்லை நடந்தே கண்டோம்,

நம்கைகள் நாமே ஊன்றி நடக்கின்ற வன்மை பெற்றோம்,
இம்மென்னும் முன்னே கால்கள் எங்கெங்கும் செல்லக் கண்டோம்,
தம்வீடு, சொந்தம் என்றே தரணியினை உரிமை கொண்டோம்,
செம்மாந்து எதையும் நன்றே செய்வேன்நான், வெல்வேன் என்றோம்,

இத்தனையும் செய்யும் பிள்ளை என்றைக்கோ ஏதும் அறியா(து)
இத்தரையில் கிடந்தான் என்னும் இவ்வுண்மை மறுப்பார் ஆரோ?
வித்தகராய் ஆகும் வன்மை வெறும்பிள்ளைக் கில்லை என்று
சத்தமாக ஆரும் சொன்னால், சகம்மொத்தம் சிரித்தி டாதோ?

குழந்தைகள் வளரும் பாங்கைக் குறையென்று யாரும் சொல்லார்,
மழலையின் பேச்சைக் கேட்டு மகிழாமல் கடந்தே செல்லார்,
அழகான செடியை வேட்பார், அற்பமாக விதையை எண்ணார்,
பழகுகலை எல்லாம் கிட்டப் பயிற்சிசெய நிபுணர் சொல்வார்,

சிறுதோல்வி வந்தால் சோர்தல், சீற்றத்தால் உலகைக் காய்தல்,
மறுபடியும் முயலேன் என்று மலைந்தேதான் மூலை சேர்தல்
இறுக்கித்தன் மனத்தை மூடி ஏழெட்டுப் பூட்டைப் போடல்,
உறுதியிலா நெஞ்சை மாற்ற ஊர்மொத்தம் வழிகள் தேடல்,

பிள்ளைக்குத் தெரிந்த உண்மை, பெரியவர்கள் உணர்ந்தால் நன்மை,
அள்ளிக்கொள் என்னும் உலகம், அங்கைகள் விரித்தால் போதும்,
துள்ளுகின்ற மனமே தவமாய்த் தூண்டிநமை இயக்கும்போது
உள்ளத்தில் உரமும் பெருகும், ஒவ்வொன்றும் வரமாய் ஆகும்!

***

என். சொக்கன் …

17 09 2015

உறுதிமொழிகள்:

1. “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“ன் “மரபுக்கவிதை” பிரிவுக்காகவே இக்கவிதை எழுதப்பட்டது
2.  இதற்கு முன் வெளியான படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது

Advertisements

4 thoughts on “உலகு உனது

 1. திண்டுக்கல் தனபாலன்

  விழாவில் வெளியிடப் படவுள்ள பதிவர் கையேட்டிற்கு விவரம் அனுப்பி அந்த விவரத்தையும் தெரிவித்துவிடுங்கள்.
  இந்த விதிகளுக்கு உட்படாத படைப்புகளை ஏற்பதற்கில்லை.

  Reply
 2. புதுக்கோட்டை வலைப்பதிவர் சந்திப்பு குழு

  விழாவில் வெளியிடப் படவுள்ள பதிவர் கையேட்டிற்கு விவரம் அனுப்பி அந்த விவரத்தையும் தெரிவித்துவிடுங்கள்.
  இந்த விதிகளுக்கு உட்படாத படைப்புகளை ஏற்பதற்கில்லை.

  Reply
  1. என். சொக்கன் Post author

   bloggersmeet2015@gmail.com என்ற முகவரிக்கு விவரங்களை மின்னஞ்சலில் அனுப்பியிருக்கிறேன் ஐயா, அது போதுமல்லவா?

   Reply

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s